வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.!
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத வர்த்தக நிலையங்களுக்கான பதிவுகளை எதிர்வரும் ஆண்டுகளில் வழங்கப்போதில்லையென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரண்டு கடைகள் தீப்பற்றி எரிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது அண்மைக் காலங்களாக எமது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலே கடைத்தொகுதிகள், மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் அண்மைக்காலமாக தீப்பற்றி எரியும் அனர்த்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய அனர்த்தங்கள் நடைபெறும் போது மாநகர சபைக்கு கிடைக்கப்பெறுகின்ற அறிவுறுத்தல்களுக்கமைய எங்களது மாநகர சபையிலிருக்கின்ற தீயணைப்பு பிரிவினர் தங்களை அர்ப்பணித்து அந்த தீயணைப்பு செயற்பாடுகளைச் செய்து அவற்றை காப்பாற்றி வருகின்றனர்.
நேற்று அந்த இரண்டு கடைகளிலும் மின்னொழுக்கு காரணமாக தீ ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அது எப்படியாக இருந்தாலும், தீ அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது அதனை அணைப்பது மாநகர சபைக்குரிய ஒரு சமூகக் கடமை. அந்த தீ பாதுகாப்பை அவர்களுக்கு நாங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது ஒரு தலையாய கடமையாக எமக்கு இருந்து கொண்டிருக்கிறது.
இதன் அடிப்படையிலே நாங்கள் அண்மையிலே மட்டக்களப்பு நகரத்திலே இருக்கிற வர்த்தகர்களை அழைத்து தீ அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது முற்றுமுழுதாக அதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு செயற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம்.
அதன் அடிப்படையிலே இப்பவும் கூட, நாங்கள் இந்த ஊடக செயலி அமர்வில் நான் வெளிப்படுத்துவது, இந்த நகரினிலே இருக்கின்ற வர்த்தகர்கள் கட்டாயம் வர்த்தக நிலையங்களில் உடனடியாக எமது மாநகர சபையுடன் தொடர்பு கொண்டு ஃபயர் எக்ஸ்டிங்குயிஷர் எனும் தீயணைப்பு கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும். அதனைப் பொருத்துகின்ற போது தான் நாங்கள் அடுத்த புது வருடங்களுக்கான உங்களது வியாபார லைசென்ஸ்களை, உரிமங்களை வழங்குவோம். அப்படி அந்த தீயணைப்பு கருவி பொருத்தாதவர்களுக்கு நாங்கள் இனிமேல் அந்த லைசென்ஸ்களை வழங்க மாட்டோம் என்பதை மிகவும் உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
ஏனென்றால், அந்த தீயணைப்பு கருவியை நீங்கள் பொருத்தி இருக்கின்ற போது, அந்த கார்பன் டை ஆக்சைடு கொண்ட கருவியானது, உடனடியாக தீ ஏற்படும் போது உடனடியாக அதனை அணைத்து முதலுதவிக்குரிய நடவடிக்கையை செய்து கொண்டு வரும் போது மாநகர சபையிலிருந்து எங்களுக்கு கிடைத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய ஐந்து தொடக்கம் 10 நிமிடத்திற்குள் எமது அந்த தீயணைப்பு பிரிவினர் அங்கே வந்து சேர்ந்து தொடர்ந்து அந்த தீயணைப்பை மேற்கொள்வதற்கு அது இலகுவாக இருக்கும். இல்லாவிடின் அந்த தீயணைப்பு மிகவும் விலாவாரியாக, பெரிதாகப் பரவி மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கும். ஆகவே அதனைத் தடுக்கும் முகமாகத் தான் நாங்கள் அந்த தீயணைப்பு கருவியை கட்டாயம் உங்களது ஒவ்வொரு கடைகளிலும் பொருத்த வேண்டும் என்பதை ஒரு கட்டளையாக உங்களுக்கு வழங்குகின்றோம்.
அதுமட்டுமல்லாது தற்பொழுது இந்த எல் நினோ என்கின்ற ஒரு காலநிலை மாற்றத்துக்குள் நாங்கள் உள்வாங்கி இருக்கிறோம். இந்த மாற்றத்தின் காரணமாக இந்த வளிமண்டலம் சூடாகி, அந்த காற்றுக்கள் எல்லாம் சூடாக இருப்பதன் காரணமாக, இந்த தீ பரவுவதற்கு ஏதுவாக இருக்கலாம் என்கின்ற ஒரு எதிர்வுகூறல்களும் சொல்லப்படுகிறது. எனவே இத்தகைய இந்த நடவடிக்கைகளை நாங்கள் கருத்தில்கொண்டு, அப்படியாக ஒரு தீ ஏற்படும் போது அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டியது எங்களது மாநகர சபைக்குரிய ஒரு தலையாய கடமையாக இருக்கிறது.
அடுத்ததாக இந்த ஃபயர் எக்ஸ்டிங்குயிஷர் என்று சொல்லப்படுகிற அந்த தீயணைப்பு கருவி பொருத்துவது என்பது, தற்பொழுது மாநகர சபை மக்களுக்கான அந்த ஒரு அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக நாங்கள் அதனை கொண்டு வந்திருக்கிறோம். ஏனென்றால் வதிவிடங்கள், ஹோட்டல்கள், வியாபாரத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுகிற ஒவ்வொரு இடங்களிலும் இந்த தீயணைப்பு கருவிகள் என்பது முக்கியமாகக் கருதப்படுகிற ஒரு உபகரணமாக இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாங்கள் தற்பொழுது திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இந்த ஃபயர் கிளியரன்ஸ் சர்டிபிகேட்டுகளை வழங்கி, இந்த தீயணைப்பு கருவிகளை நீங்கள் பொருத்த வேண்டும் என்கின்ற அந்த அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம். அது எப்படியாக இருந்தபோதிலும் மாநகர சபை கட்டாயம் ஒவ்வொரு கடைகளிலும் இந்த தீயணைப்பு கருவிகளைப் பொருத்த வேண்டும் என்கின்றதை மிகவும் அழுத்தமாக, கட்டளையாக வழங்குகின்றது.
நாங்கள் முற்றுமுழுதாக அவங்களோட பாதுகாப்பு கருதி, முழுச் சட்டத்திற்குட்பட்ட எங்களது நிதி, நிர்வாக நடைமுறைக்குட்பட்ட முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். உண்மையாக ஒரு கட்டடம் ஒன்று ஒரு வியாபாரத் தலமாக இருக்கலாம், இல்லை ஒரு குடியிருப்புத் தலமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும், ஒரு அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கான பகுதி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறி, அதனை மென்ஷன் பண்ணித்தான் நாங்கள் அந்த பிளான், அந்த அனுமதி வழங்குகிறோம்.
ஆனால் அவர்கள் அந்த அனுமதியைப் பெற்றுவிட்டு தீயணைப்பு ஒன்று ஏற்பட்டால் வெளியேறுகின்ற அந்தப் பகுதியையும் சேர்த்து அவர்கள் அந்த கட்டட நிர்மாணத்திற்குள் உள்வாங்கி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொன்னால் நேற்று நடந்த அந்த ஃபயரை நீங்கள் பார்த்திருந்தீர்கள் ஆனால், அங்கே திடீரென்று ஒரு அனர்த்தம் ஏற்படும் போது வெளியேறுகின்ற எந்தப் பகுதியும் இருக்கவில்லை.
ஏனைய ஒரு பில்டிங்குக்கு மேல் ஏறி அதன் மூலம் தான் அந்த பில்டிங்குக்கு போய் அந்த தீயை அணைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அங்கே இருந்திருக்கிறது. எனவே நாங்கள் முற்றுமுழுதாக நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எங்களது அந்த வாடிக்கையாளர்கள் அதை கவனமெடுத்துச் செய்வது தொடர்பான அவங்களுக்குரிய அந்த விழிப்புணர்வு என்பது இதுவரைக்கும் இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்கிறது.
கடந்த மாதம் கூட அவர்களைக் கூப்பிட்டு நான் சொன்னேன் நீங்கள் இந்த தீயணைப்பு கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று ஆனால் அவர்கள் இதுவரைக்கும் அதை விரும்பி வந்து செய்ததாக இல்லை. ஆனால் வார திங்கட்கிழமை முதல் கட்டாயமாக ஒவ்வொரு கடைக்கும் நாங்கள் பொருத்துவோம். அப்படிப் பொருத்துகிற நேரம் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவங்களுக்குரிய அந்த லைசென்ஸை நாங்கள் இரத்து பண்ணுவோம். நிச்சயமாக அந்த வியாபாரத்தை நாங்கள் தடை செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.